Sunday, June 20, 2010

காதல் தோல்வியும் சூசைடு சபாவும்...

கரண், இருபது வயது இளைஞன், ஒல்லியான உருவம்,
நீள மூக்கு ,அரும்பு மீசை, காற்றில் பறக்கும் ஹேர் ஸ்டைல்,
முகத்தில் எப்போதும் தாராளமான முகப் பருக்கள், பருக்களை  கிள்ளுவதற்கே  அவனுக்கு நேரம்  சரியாக இருந்தது .

சிகரெட் தண்ணி என்று சந்தோஷமாக வாலிபத்தை  அனுபவித்துக் கொண்டிருந்தவன்,அவனது நண்பர்கள் சிலரைப் போல் ஒரு வயது மூத்த பெண் மீது காதல் கொண்டான், சில நாள் சென்ற பின் ஒரு வயது இளைய பெண்ணோடும் காதல் வந்தது,அப்போதே பிரச்சினைகளும் தொடங்கியது.முதல் காதலி பிரிந்தாள், இரண்டாமவள் அவனை ஏற்கவில்லை.

அவனது மாமா குவைத்திலிருந்து வந்திருந்தார், அவரிடம் சென்று சொன்னான்,"மாமோ லவ்வு ஊத்திகிச்சு, என்ன பண்றது?"

 மாமா அவனை முடி திருத்தகத்திற்கு அழைத்து  போய்  அவனது அழகிய ஹேர்  ஸ்டைலை ஒட்ட வெட்டி மொட்டை அடிப்பது போல் ஆக்கினார், வெளிய வந்து 'மயிரு போச்சுன்னு சொல்லிட்டு போய் கிட்டே இரு',ஒரு காதல் போச்சுன்னா...அடுத்தது, அதனால கவலைப் பட்டு உன் உடம்பை கெடுத்துக்காதே' என்றார்.

இரவு பதினொன்று மணி:
கரணும்    நண்பர்களும் மஸ்கட்டில் இருந்து விடுமுறைக்கு வந்தவரை தட்டி எழுப்பி , "அண்ணே குடிக்குறதுக்கு  பைசா இல்ல, ஒரு முன்னூறு ரூபா தாங்க" என்றார்கள்.

எரிச்சலோடு  வெளியே வந்தவர் மீண்டும் வீட்டிற்குள் போய் பணத்தை எடுத்து கொடுத்து விட்டு,"தம்பிகளா இனிமேல் இந்த மாதிரி அர்த்த ராத்திரியில் வீட்டிற்கு வந்து தொந்தரவு பண்ணாதீங்க" என்று அனுப்பி வைத்தார் .

பூட்டிய டாஸ் மாக்கின் ஷட்டரை இடித்தார்கள்..ஷட்டர் சிறிதாக உயர்ந்தது...
ஒரு கை மட்டும் வெளியே நீண்டது, பணத்தை கொடுத்து ஒரு ஃபுல் வாங்கினார்கள்.

மூன்று பேரும் நன்றாக குடித்து விட்டு, ஆளுக்கொரு புறம் சென்று உறங்க போய் விட்டார்கள்.கரணுக்கு மட்டும்  உறக்கம் வரவில்லை , கையில் கிடைத்த ஏதேதோ 'இருபதிற்கும் அதிகமான' மாத்திரைகளைவிழுங்கி  விட்டு...ஒதுக்குப் புறமான ஒரு இடத்தில் போய் படுத்துக் கொண்டான் .

இரவில்  கண் விழித்த நண்பன், கரணை   காணாததால் ,சந்தேகத்தில் அவனை தேடி ஓடினான்.கரண் வழி அருகில் வாயில் நுரை தள்ளி கிடப்பதை கண்டவன், அவனை மருத்துவ மனையில் கொண்டு சேர்த்தான்.

கரணின் வயிற்றை கழுவி அவனை பிழைக்க வைத்தார்கள்.

அவன் கண்விழித்து பார்க்கும்போது,
படுக்கையின் அருகில் குளுகோஸ் பவுடரும்  ,பிஸ்கட்டும் இருப்பதை கண்டு மகிழ்ந்தான்.பசி வயிற்றை கிள்ளியதால், உடனே பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்டான் .


அவனை பார்க்க வந்த அவனது தந்தை கோபத்தோடு சொன்னார்,
"அவனையும் , அவன் முடியையும் பாரு...பிச்சக் காரன் மாதிரி...". 
அவன் தற்கொலை செய்ய முயற்சித்ததை விட அவனது முடி ஒட்ட வெட்டப் பட்டு சீயான் விக்ரம் போல் காட்சி அளித்ததே  அவருக்கு கோபத்தை வரவழைத்திருந்தது.

நண்பர்கள் வந்தார்கள், "என்ன கரண் பிஸ்கட் சாப்புடிறியா, நல்லா சாப்புடு டீ...ஒனக்கு ஒரு பிஸ்கட் பிளாஷ் பேக் சொல்றோம் அதுக்கு முன்னாடி இந்த க்ளுகோசையும் குடி" என்றார்கள்.அவனும் குடித்துக் கொண்டே கதை கேட்பதற்கு தயாரானான் .


பத்து வருடங்களுக்கு முன்பு அதே மருத்துவமனையின்,அதே படுக்கையில் :


காலை ஆறு மணி:
"நான் உயிரோடு தான் இருக்கிறேனா?" மெதுவாக கண்களை திறந்து கொண்டே, அருகில்  நின்று கொண்டிருந்த நண்பனிடம் கேட்டான் அருண் .

 "ஆமா நாங்க தான் உன்னை பொழைக்க வச்சோம், என்ன பாக்குற???
அவ்வளவு  சீக்குரத்துல எல்லாம் சாக விட மாட்டோம்.சங்கர் கடை'ல டீ குடிச்ச பாக்கி எல்லாம் யாரு குடுக்குறது?" ஐ சி யு' வில் மேல் நர்ஸ்  ஆக பணிபுரியும் ஜெய்  அவனை கலாய்த்தான்.

"நீ சாகுறதுல யாருக்கும் எந்த கவலையும் இல்ல...
சும்மா "ஸ்டொமக் வாஷ்"(Stomach wash ) பண்ணி ப்ராக்டீஸ் பண்ணி பாத்தோம்...
நீ பொளச்சிட்ட அவ்வளவு தான் டீ...

சரி எனக்கு டூட்டி  முடிஞ்சுது , கொஞ்ச நேரம் தூங்கிட்டு அப்புறமா வந்து பாக்குறேன்,பசிச்சின்னா இந்த க்ளுகோஸ் பவுடர் கலக்கி குடி, பிஸ்கட் சாப்பிடு" சொல்லி விட்டு ஜெய்  நகர்ந்தான்.

இடது கையில் குளுகோஸ் போய்கொண்டிருந்தது, சிறுநீர் போவதற்காக சிறுநீர் குழாயிலும் டியூப் போட்டிருந்தார்கள்.ஐ சி யு அறையின் , ஏ சி குளிரிலும் அவனுக்கு வியர்த்தது,  எவ்வளவு நேரம் மயக்கத்தில் இருந்தேனோ? கடைசியாக என்ன செய்தேன்...குழம்பினான் அருண் .


முந்தைய  இரவு :
அவளிடம் எட்டாவது முறையாக காதலை சொல்லியும் அவள் ஏற்க மறுத்துவிட்டிருந்தாள். மாலை நண்பர்களோடு சொல்லி கலங்கினான்...
லீலா இல்லன்னா ஒரு மாலா...இதுக்கெல்லாம் கவலபட்டுகிட்டு???
போய் வேற ஏதாச்சும்  ஃபிகர் மடியுதான்னு பாரு மச்சான் ...எல்லோரும் ஒரே போல் சொல்லிவிட்டு போனார்கள்.

அவன் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர். மாநிறம் ,சாதாரண உயரம், உதட்டை இளித்து நகைச்சுவையாக பேசுவான்,மிமிக்ரி செய்வான்.யாரோடும்  ஒரு முறை பேசினால், அவர்கள் பேசுவது போல் , நடப்பது போல் செய்து காண்பித்து விடுவான்.

மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் போல் இண்டர்காமில் பேசி அங்குள்ள நர்சுகளை சிரிக்க வைத்து மிகவும் சகஜமாக பழகி கொண்டிருந்தான்.

அப்போது தான் அவனுக்கு அங்குள்ள ஒரு பெண்ணோடு  காதல்  வந்தது.
அவளோ அவனை சிறிதேனும் சட்டை செய்யாமல்  இருந்தாள்.
பல முறை தன் காதலை சொல்லியும் அவள் ஏற்கவில்லை.
அவனால் தாங்க முடியவில்லை, ஊரோரமுள்ள அரளிக்காய் செடியில் பத்து பெரிய காய்களை பறித்துவிதைகளை எடுத்து நன்றாக அரைத்து குடித்து விட்டான்.

வாயில் நுரை தள்ளி கிடந்தவனை நண்பர்கள்  தான் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையும்  அளித்தார்கள்.

நினைவலைகளில் இருந்து திரும்பியவனுக்கு பசி வயற்றை கிள்ளியது.
அருகிலிருந்த பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்டான்...குளுகோஸ் பவுடரை டம்ளரில் தட்டி தண்ணீர் கலக்கி குடித்தான்.மிகவும் ஆசுவாசமாக இருந்தது.

மாலை  ஜெய் மற்றும் அவனது நண்பர்கள் எல்லாரும் அவனை பார்க்க வந்தார்கள்.

"ஜெய் உங்களுக்கெல்லாம் எவ்வளவு பாசம்?
பசி உயிர் போனப்போ, நீ வாங்கி தந்த பிஸ்கட்டும்
குளுகோஸ் பவுடரும் தான் என் உயிரை காப்பாத்திச்சு ...
உங்களுக்கெல்லாம் எப்புடி நான் கைம்மாறு பண்ணப் போறேன்? "
என்று சொல்லி கொண்டே அழத் தொடங்கினான்.

"அந்த குளுகோஸ்'காக  நன்றி சொல்லனும்னா  பக்கத்து படுக்கைல இருந்த தாத்தாவுக்கு தான் நீ நன்றி சொல்லணும்" என்றான் ஜெய் .

'எங்கே அந்த தாத்தா ?' என்று இரண்டு படுக்கைகளுக்கும் இடையே இருந்த  திரையை விலக்கி  பார்த்தான்,தாத்தாவை காணவில்லை.

"அவர் நேத்து ராத்திரியே இறந்துவிட்டார்,அவர் பாடிய கொண்டுபோனதும் இந்த குளுகோஸும்  பிஸ்கட்டும் அங்கேயே இருந்துச்சு, அவர் வெறும் ரெண்டு பிஸ்கட் தான் சாப்பிட்டிருந்தார்  அதனால   தான் உன் படுக்கை பக்கத்துல மாத்தி வச்சேன்" ஜெய் சொல்லி முடிக்கவும்  நண்பர்கள் அனைவரும் கோரசாக சிரித்தார்கள்.

"அடப் பாவி இதுக்காடா என்னோட  வயிற கழுவி காப்பாத்துனீங்க? "  என்று சாப்பிட்டதை வெளியே கொண்டு வர முயற்சித்து தோற்றான்.

"சூசைடு பண்ற நாயெல்லாம், இத சாப்பிட்டதுக்கு போய் வருத்தப்படுத்து பாரு...
இது ஒரு சின்ன தண்டனை தான், அமைதியா டிஸ்சார்ஜ் ஆகி வெளிய வா...   இனியாவது  வாழ்க்கைய வாழப் பாரு.... சொம்மா பொண்ணுங்களுக்காக சாகுறேன் பேர்வழி இப்புடி செஞ்சன்னா...நாங்களே உன்ன கொன்னுடுவோம் ..........மகனே " என்று சொல்லி நண்பர்கள்   அனைவரும்  வெளியேறினார்கள் .




ஃ ப்ளாஷ் பேக் கேட்டுக் கொண்டிருந்த கரணும் வாந்தி எடுக்க முயற்சித்து தோற்றான் ...


ICU'ல் உள்ள அந்த படுக்கை இப்போதும்  இது போன்ற காதல் மன்னர்களுக்காக காத்துக் கொண்டே இருக்கிறது  !!!!


வேறு பெண்ணே இல்லாத உலகத்தில் தானே 
நீ ஒருத்திக்காக ஏங்க வேண்டும்?

தமிழ் சினிமாவில் நடப்பது போலெல்லாம்
வாழ்க்கையில் நடப்பதில்லை.

காதல் யதார்த்தத்தை மிஞ்சும் போதே
தற்கொலைகள் அரங்கேறுகின்றது.


காதல் வாழ்வதற்கு ஊக்குவிக்க வேண்டுமே தவிர சாவதற்கல்ல!!!