Saturday, May 8, 2010

முறிந்த கிளை ஒன்று பூக்குதே!


 என் வாழ்க்கையின் வசந்த காலம் அது, கல்லூரி நாட்கள். மிகவும் ஜாலியாக  "நர்சிங்" மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். எனது ஆறுமாதக் கால ஆபரேஷன் தியேட்டர் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. நான் ஆப்பரேஷன் தியேட்டரில் வேலை செய்வதை மிகவும் விரும்பினேன், தினமும் புதுவிதமான அறுவை சிகிச்சைகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தேன்.  ஒரு  நாள் காலை ,  சர்ஜிகல் வார்டில்(Surgical ward) இருந்து இண்டர்காம் அழைப்பு "கிறிச்சான்... உடனே வா ஒரு அட்மிஷன் வந்துள்ளது, உனக்கு கேர் ஸ்டடி (Care Study) வேண்டுமென்று சொல்லி இருந்தாய் அல்லவா " என்றார்கள், இன்-சார்ஜ்  சிஸ்டர். உடனே ஆபரேஷன் தியேட்டர் பச்சை உடைகளை மாற்றி விட்டு சர்ஜிக்கல் வார்டிற்கு ஓடினேன்.


முப்பது  வயது வேலு-ஆட்டோ டிரைவர் , ஆட்டோ விபத்துக்குள்ளாகி  அட்மிட் ஆகி இருந்தார். கேர் ஸ்டடி என்றால் ஒரு நோயாளி மருத்துவமனையில் அட்மிட் ஆனது முதல் டிஸ்சார்ஜ் ஆகும் வரைக்கும் உள்ள அனைத்து சிகிச்சைகளிலும் என் பங்களிப்பு இருக்க வேண்டும் ,அதை  டாகுமென்ட் செய்து சமர்ப்பிக்கவும்  வேண்டும். எனவே வேலுவின் ஃபைல் எடுத்து நோட்டமிட்டேன். 


இடது  முழங்காலில் இரண்டு எலும்புகளும் உடைந்திருந்தன  (Both bone Fracture), வலது காலில் ரத்த ஓட்டம்  (Insufficient Blood Supply to the Limb ) இல்லாததினால்  அதை ஆம்ப்புடேஷன் (Amputation) செய்து  துண்டித்து   மாற்ற வேண்டும்  என்றிருந்ததைக் கண்டு வருத்தப் பட்டேன் .


வேலுவிடம் சென்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். "ஹலோ பாஸ், நான் மூன்றாமாண்டு மேல் நர்சிங் ஸ்டுடென்ட்  (Male Nursing Student) , நீங்க டிஸ்சார்ஜ் ஆகுறவரைக்கும் நாம டெய்லி மீட் பண்ணுவோம்" என்றேன். மிகுந்த வேதனையிலும் என்னை நோக்கிப் புன்னகைத்தார்.


" டாக்டர் என்ன சொன்னாரு?" என்றதற்கு, "இன்ஜெக்ஷன் போட்ருக்காங்க, இரத்த ஓட்டம் நாளைக்கு காலைக்குள்ள  வரலன்னா , காலை  எடுக்க வேண்டி இருக்கும்'னு சொன்னாங்க " என்றார்.


அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போதே சிஸ்டர் வந்து " அவுட் புட் இல்ல, யூரின் காதிட்டர் போட வேண்டும்" என்றார்கள். சரி என்று தலை அசைத்து விட்டு காதிட்டர் மற்றும் உபகரணங்கள்  எடுத்து வந்தேன்.


வேலுவின் அருகில் எனது நண்பர் ஒருவர் நின்றிருந்தார். அவர் காதலித்த பெண்ணுக்காக " அரளிக்காய் அரைத்து சாப்பிட்டு மிகவும் பிரபலமானவர்". நான் அவரைப் பார்த்து புன்னைகைத்துக்  கொண்டே " வேலுவை உங்களுக்கு தெரியுமா?" என்றதற்கு "ஆமாம் நாங்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்கள்" என்றார்.


 "யூரின் போறதுக்காக டியூப் போட வேண்டும், நீங்க கொஞ்சம் வெளிய இருக்கீங்களா ?" என்றேன். "இல்ல ...நான் டியூப் போடுறது பாத்தது இல்ல, நானும் இருக்கேனே" என்றார்,  நான் வேலுவைப் பார்த்தேன். வேலு "பரவா இல்ல ... அவன் இருக்கட்டும் என் நண்பன் தானே ?" என்றார்.


வலி அறியாமல் இருப்பதற்கான சைலோகைன் ஜெல்'லை  முதலில் சிறுநீர் குழாயில் இன்ஜெக்ட் செய்தேன், நண்பர் கவனமாக பார்த்துக் கொண்டே இருந்தார், பின்பு மெதுவாக காதிட்டர்   டியூப்பை நுழைத்தேன் . பின் காதிட்டரை யூரின்  சேகரிப்பதற்கான பை யுடன் (Uro -Bag) இணைத்து கிளாம்பை ரிலீஸ் செய்தவுடன் , சிறுநீர் சிறிது ரத்தத்தோடு சேர்ந்து சிவப்பு நிறத்தில் யூரின் பையை நிரப்பிக் கொண்டிருந்தது.


பொத்தென்று சத்தம் கேட்டு திரும்பினால், ரத்தத்தை  கண்ட நண்பர் மயங்கி கீழே விழுந்திருக்கிறார். தூரத்தில் இருந்து கவனித்த  இரண்டு தாதியர்கள் ஓடி வந்து அவரை மெதுவாக எழுப்பி நர்சஸ் ரூமிற்கு (Nurses Room) அழைத்து சென்றார்கள். நான் என் வேலையை முடித்து விட்டு, அவரிடம் சென்று " என்ன ஆச்சு...என்னஓய் நீரு பெரிய சண்டியர் மாதிரி பேசுவீரு, இவ்வளவு தானா நீரு?" என்று  கிண்டல் செய்தேன்.


 மறுநாள் காலை வரை ரத்த ஓட்டம் இல்லாததினால் வலது  காலை ஆம்புட்டேஷன் செய்வதென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது . காலையில் அவசரமாக குளித்து கிளம்பி கொண்டிருந்தேன், எனது ஜூனியர்கள் இருவர் உறங்கி கொண்டிருந்தனர். என்  நண்பன்  மெதுவாக "ஏன் மாப்ள  டென்ஷனா இருக்குற?" என்றதற்கு   "ஒண்ணுமில்ல என்னோட  கெயர் (care)  பேஷண்டுக்கு இன்னைக்கு ஆம்புட்டேஷன் பண்ணி காலை எடுக்குறாங்க டேய், அசிஸ்ட் பண்ணனும் இல்ல? மத்தவரு வேற ஏதாச்சும் சொல்லிக் கிட்டே   ஆபரேஷன் பண்ணுவாரு...அதான் டென்ஷன்" என்றேன். "தலைவராப் பண்றாரு? இன்னைக்கு தியேட்டர்'ல கொண்டாட்டம் தான் " என்றான் நண்பன் .


வார்டிற்கு ஓடினேன், வேலுவை சுத்தப் படுத்தி ஆபரேஷன் தியேட்டர்'க்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தேன். அவரது எட்டு  மாத கர்ப்பிணி மனைவி அழுது  கொண்டேஅருகிலிருந்தார். பார்க்கவே பரிதாபமாக இருந்தது. தனியாக  அழைத்து "அவருக்கு தைரியமூட்ட வேண்டிய நீங்களே இப்படி அழலாமா?" என்றேன்.


"எங்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது, இரண்டு மாதங்களில் எனக்கு குழந்தைப் பிறந்துவிடும் , என்னை கவனிப்பதற்கு இவர்   மட்டும் தான் இருக்கிறார் , இந்த நேரத்தில்  அவருக்கு இப்படி ஆகிவிட்டதே" என்று கலங்கினார்கள். "ஆப்பரேஷனுக்குப்  பின் செயற்கை கால் பொருத்தி விடுவார்கள், பின்பு அவருக்கு பழையது போல் நடக்கலாம்" என்று  ஆறுதல் கூறினேன்  .


ஸ்ட்ரெச்சரில் வேலுவை படுக்க வைத்து,  இரண்டு பேர் தள்ளிக் கொண்டு வர, அவரது  ஃபைலை ஒருக் கையிலும் , குளுகோஸ் பாட்டிலை மற்றொரு கையிலும் பிடித்து கொண்டே தியேட்டரை அடைந்தேன். தியேட்டர்  நுழை வாயிலில் ஆர்த்தோ டாக்டர்  (எலும்பு முறிவு சிகிட்சை நிபுணர் )  வேலுவின் தந்தைக்கு அறுவை சிகிச்சை எப்படி செய்யப் படும் என்று விவரித்துக் கொண்டிருந்தார், "குட் மார்னிங் டாக்டர்" என்றதற்கு, "என்னய்யா...கையில பாட்டில்  எல்லாம் பிடிச்சிட்டு வர்ற ?"  என்று எப்போதும் போல கிண்டல் செய்தார்.


அனஸ்தீஷியா (Anesthesia  ) கொடுக்கப் பட்டு, வேலு மயக்க நிலைக்குப் போன பின் ஆபரேஷன் தொடங்கியது, எனது சீனியர் ஒருவர் மெயின்  அசிஸ்டன்ட் ஆக (Scrub Nurse ) சர்ஜனுக்கு உதவிக் கொண்டிருந்தார், நான் வேலுவின் காலை தூக்கி பிடித்துக் கொண்டிருந்தேன், மூட்டிற்கு கீழ்வரைக்குமாக கொஞ்சம் தோலை  மட்டும்  ஃபிளாப் (flap )  ஆக வைத்து விட்டு, காலை அறுத்து கொண்டிருந்தார் டாக்டர்.


சிறிது நேரத்தில் வேலுவின் கால் தனியாக என் கரங்களில், நான் டாக்டரைப் பார்த்தேன், அருகிலுள்ள பக்கெட்டில் போடுமாறு கூறினார். நடுக்கத்தோடு  "உயிரோடிருக்கும் மனிதனின், இறந்து போன காலை" பக்கெட்டில் இட்டேன்  . ஆப்பரேஷன்   சக்சஸ்!!!
வேலு அறுவை சிகிச்சை  வார்டிற்கு மாற்றப் பட்டார்,  மாலை வரை மயக்கத்திலே இருந்தார். மீண்டும் இன்ஜெக்ஷன் கொடுத்து உறங்க வைக்கப் பட்டார்.


அன்றிரவு தூக்கம் வராமல் மிகவும் வருந்தினேன் , வேலுவை பற்றிய எண்ணங்கள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி இருந்தது, சில வருடங்களுக்கு முன் வேலுவின்  தம்பிக்கும் ஒரு விபத்தில் அகப்பட்டு வலது கை ஆம்புட்டேஷன்  செய்திருந்தார்களாம். அவர் இப்போது செயற்கை கை பொருத்தி உள்ளாராம். மனதிற்கு கஷ்டமாகவே  இருந்தது.

 மறுநாள் காலை போய் காலையில் கொடுக்க வேண்டிய ஆண்டிபயோட்டிக்ஸ் இன்ஜெக்ஷன் முதல்  மருந்துகள் அனைத்தும் கொடுத்து  டாக்குமென்ட் செய்தேன் . அவர் மனைவியும் அவரும் மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்த படி அழுது கொண்டே இருந்தார்கள். எனக்கும் அது மிகவும் தர்ம சங்கடமான நிலையாக இருந்தது. "டாக்டர் வந்து பாக்க வரும்போது இப்புடி அழுது கொண்டு  இருக்க கூடாது" என்றேன், இருவரும் 'சரி' என்றார்கள். வார்டிலிருந்து வெளியேறி நடந்தேன் , பின்னால்  இருந்து  "கிறிச்சான்" என்றொரு குரல் கேட்டு திரும்பினேன், என் தோழி வந்து கொண்டிருந்தாள்.


"ஹேய்... சீனியர் கைகள் தான் அப்டி கூப்பிடுறாங்கன்னா...நீயுமா?" என்றேன். "நான் கூப்பிடாம வேற யார் கூப்பிடுவா? " என்று உசுப்பேத்தினாள்.


"என்ன டா உன்ன பாக்கவே முடியல...சார் ரொம்ப பிஸியோ ?" என்றாள்.


"ஆமா கொஞ்சம் பிஸி தான் , கேர் ஸ்டடி ...அந்த பேஷன்ட் பத்தி தான் உன்கிட்ட பேசணும்..." என்றேன்.


 மனைவி எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும்போது, கணவனுக்கு ஒரு கால் துண்டிக்கப் பட்டால் அந்த தம்பதிகள் எவ்வளவு வேதனைப் படுவார்கள், அவர்களை எப்படி தேற்றுவது என்று கேட்டேன். அவள் 'பைபிள் கதைகள் சொல்லிக் கொடு, ஒ பி டி (OPD ) ல நோயாளிகளுக்காக  வச்சிருக்கிற பைபிளுல ஒண்ணு எடுத்து படிக்க குடு' என்று ஆலோசனைக் கூறினாள்.


"அவர் ஹிந்து டீ...அப்புறம் மதமாற்றத்துக்கு முயற்சிப் பண்றேன் அப்டி இப்பிடி ன்னு பிரச்சினை ஆகிடப் போகுது"  என்றேன்.


"ஹேய்  அப்டி பாத்தா நானும் தான் ஹிந்து...நான் பைபிள் வாசிக்கலியா ...சும்மா குடு...பிரச்சினை ஒன்ணும் வராது , அவருக்கு இப்போது கொஞ்சம் டைவெர்ஷனல்  தெரபி (Diversional Therapy) தான் தேவை , பைபிள் படிக்குறது கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்கும்  " என்றாள்.
                                                
மாலை டூட்டி முடிந்ததும் குளித்து புறப்பட்டு , OPD யில்(Out Patient Department) இருந்து  ஒரு சிறிய பைபிளை எடுத்து கொண்டு வேலுவை பார்க்க சென்றேன். "துண்டிக்கப் பட்ட காலின் பெருவிரலில் வலி ஏற்படுவதாக சொல்லி ரகளை பண்ணிக் கொண்டிருந்தார் , அதிர்ச்சி அடைந்தேன்.

முன்தினம் தான், நான்  "ஃபான்றம் லிம்ப்  (Phantom Limb ) "  பற்றி படித்திருந்தேன் . ஆம்ப்புடேஷன் செய்து கால் துண்டிக்கப் பட்டப் பின் நோயாளிகளுக்கு தோன்றும் ஒரு பிரமை வேதனை, துண்டிக்கப் பட்ட கால் இருப்பதைப் போலவும், அதில் வேதனை வருவதாகவும் உணர்வார்கள் என்று. வேலுவை  சமாதானப் படுத்துவதற்குள் போதுமென்றாகி விட்டது. 

மெதுவாக பேச்சை  மாற்றினேன் "வேலு சொல்றேன்னு தப்பா நினைக்கலைன்னா ஒரு பைபிள் கதை சொல்லட்டுமா?" என்றேன்.  "சொல்லுங்க பாஸ், நமக்கு வேதக் கோயிலும்,சாமி கோயிலும் எல்லாமே ஒண்ணு மாதிரி தான் "என்றார் .

நான் உடனே கதை சொல்ல ஆரம்பித்தேன் "யோபு'ன்னு ஒருத்தரப் பத்தின கதை ஒண்ணு இருக்கு, அவர் ரொம்ப நல்லவரா இருந்தார், அதனால சாத்தான் அவரை சோதிப்பான், அவரோட குழந்தைகள், ஆடு மாடுகள் எல்லாம் இறந்து போய் விடும்...ஆனாலும் யோபு கடைசி வரைக்கும் கடவுளை   மறுதலிக்காம அவர வணங்கினனால  , கடவுள் அவருக்கு எல்லாத்தையும்    திரும்ப கொடுத்தார், அப்புறம் அவரு நாலு தலை முறை பிள்ளைகளையும் பாத்தப் பிறகு ரொம்ப நாள் உயிரோட இருந்தாராம்" . 

அதனால சோதனைகள் எல்லார்  வாழ்க்கையிலயும் வரத் தான் செய்யும். தளர்ந்து விடக் கூடாது, இந்த துன்பத்துக்கெல்லாமா  சேர்த்து கடவுள் உங்களுக்கு நல்ல காலத்த தருவாருன்னு சொல்லி, அந்த சிறிய பைபிளை அவர் கையில் கொடுத்தேன்  .

"சிரித்துக் கொண்டே அதை வாங்கியவர், தினமும் மாலை டூட்டி  முடிந்ததும் வந்து இது மாதிரி கதை சொல்வீங்களா?" என்றார். கண்டிப்பாக வருவேன் என்றேன். 

இரண்டு நாட்களுக்குப் பின் வேலுவிற்கு  இடது காலில் ஆப்பரேஷன் செய்து ப்ளேட் வைக்கப் பட்டது. அன்று மாலை  என்  நண்பர்கள்  சிலரை  அவருக்கு அறிமுகப் படுத்தினேன், தினமும் நானும் நண்பர்களும் அவரைப் போய் பார்ப்போம் , சிரித்துப் பேசுவோம். 2 மாதங்களுக்கும் மேலாக மருத்துவ மனையிலேயே இருந்தார்,  அவரது மனைவிக்கும் அங்கேயே குழந்தைப் பிறந்தது . என் வகுப்பு தோழிகள் அவரது மனைவிக்கு மிகவும் உதவி செய்தார்கள்.  பின்னர் டிஸ்சார்ஜ் ஆகி போய் விட்டார்.
                                                             

படிப்பை முடித்து, சில காலம் அங்கே பணிபுரிந்தேன், பின்னர் கேரளாவிற்கு மாற்றப் பட்டேன். வேலுவை நான் மறந்தே போயிருந்தேன்.  ஒரு நாள் நான் பழைய நண்பர்களைப் பார்ப் பதற்காக மருத்துவ மனைக்கு  போய் விட்டு, அருகிலுள்ள பேரூந்து நிறுத்தத்தில் , பேரூந்திற்காக  காத்திருந்த போது, என் அருகில் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். என்னை பார்த்து புன்னகைத்தார் , நானும் புன்னகைத்தேன். ஆனால் எனக்கு யாரென்று புரியவில்லை  ( எனக்கு ஞாபக மறதி அதிகம்).


என் குழப்ப பார்வையை கவனித்த அவர் "என்னை தெரிய வில்லையா? நான் தான் வேலு என்று வேட்டியை விலக்கி  தன் செயற்கை காலை காண்பித்தார். என்னையுமறியாமல் அவரை கட்டி பிடித்தேன், கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது.


"என்னால் இப்போது நடக்க முடியும் பாஸ்" என்று, அங்கும் இங்குமாக ஊன்று கோல் உதவியுடன் நடந்து காண்பித்தார்.


" நான் பிசியோதெரபிக்கு  வரும்போதெல்லாம் உங்களைப் பற்றி உங்கள் நண்பர்களோடு விசாரிப்பேன் , என்  மகனுக்கு இப்போது ஒரு வயதாகிறது, வாங்க டீ சாப்பிடலாம் " என்று அழைத்து சென்றார். இப்போது சிறிய கடை ஒன்று வைத்திருப்பதாக சொல்லி சந்தோஷமடைந்தார்.


சிறிய சிறிய பிரச்சனைகளை எல்லாம் , உலகிலேயே கொடுமையான விஷயமாக கருதி பயந்து கொண்டிருந்த எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கை வருவதற்கு வேலுவின் வாழ்க்கையும்  ஒரு உதாகரணம் ஆனது. 
           
            நேற்றைய சந்தோஷம் நாளைக்கு தீர்ந்துவிடும். 
            போன வாரத்து துக்கம் இந்த வாரம் சாதாரணமாய்த் தெரியும். 
            திங்கட்கிழமை இருந்த பயமும், வேதனையும், 
            புதன் கிழமை வரை கூட இருப்பதில்லை.  
           


இந்த உலகில் எதுவும் நிரந்தரமல்ல, நமது துயரங்களும்தான்.

- சார்லி சாப்ளின்