Thursday, April 29, 2010

மறக்க முடியாத ஓர் இரவு

                              

 பன்வேல் ,மும்பையிலிருந்து 22 கீ .மீ தொலைவில்  மும்பை-பூனே நெடுஞ்சாலையில் இருக்குற  ஊர் .  . அங்கிருந்து ஷேர் ஆட்டோ'வில் போனால் அரைமணி நேரத்தில் "திருபாய் அம்பானி மருத்துவமனை" வந்து விடும் .  அது ரிலையன்ஸ்  நிறுவனத்தின் ஊழியர்களுக்கான மருத்துவ மனை. அங்கு நான் அவசர சிகிச்சை  பிரிவில் இணைந்து ஒரு வார காலமாகி இருந்தது. அப்போது எனக்கு ஹிந்தி அறவே தெரியாத காலம் ( இப்போ மட்டும் தெரியுமாக்கும் என்கிறீர்களா?).  ஏதோ நமக்கு தெரிந்த ஆங்கிலம் மற்றும் மலையாளம் மூலம் சக ஊழியர்களுடன் ( தாதியர்கள்)  பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தேன்.

அந்த மருத்துவ மனையின் அருகில் வேறேதும் கடைகளோ, வீடுகளோ கிடையாது. மருத்துவமனையின் அருகிலேயே , ரிலையன்ஸ்  நிறுவன ஊழியர்கள் மற்றும்  மருத்துவ மனை ஊழியர்கள் தங்குவதற்காக  500 க்கும் அதிகமான   குடியிருப்புகள்  இருந்தன  .  அந்த குடியிருப்பில் ஒரு மேல் மாடியில் எனக்கும் ஓர் அறை தந்திருந்தார்கள் .
                                                          
அன்று டூட்டி முடிந்து என் அறைக்கு வந்தேன், என்னோடு தங்கி இருந்த மராட்டிய ஆண்-தாதியர் (Male Nurse ),  ஏற்கனவே நைட் டூட்டிக்கு போயிருந்தான்.  அப்போது சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதற்கான முயற்சி தொடங்கி வெற்றிகரமான  ஒரு வாரக் காலமாகி இருந்தது. போர் அடிக்கிறதே , என்ன செய்வது என்றறியாது  குழம்பி இறுதியில், குடியிருப்புக்களுக்கு நடுவே அமைந்திருந்த டிப்பார்ட்மெண்டல்  ஸ்டோர் போகலாமென    நடக்க துவங்கினேன் . 

அங்கு போய் ஷேவிங் கிரீம் , பேஸ்ட்  போன்ற தினசரி தேவைக்கான சாமான்கள் வாங்கி வந்தேன். பின்பு இரவு உணவு அருந்துவதற்காக  மருத்துவமனைக் கருகிலுள்ள கான்டீன் போகலாம் என்று நடந்த போது, எதேச்சையாக மருத்துவமனை  டெலிபோன் பூத்தை  கண்டேன். சரி ... ஊரில் நண்பர்களுக்கு போன் செய்யலாமென அங்கு சென்று, அங்கிருந்த ஹிந்தி காரரிடம்  "ஐ வான்ட் டு கால் எஸ் டி டி  " என்றேன், காபினுக்குள் போய்   ஃபோன் செய்ய சொல்லி கை அசைத்தார்.




சாதரணமாக பெல் அடித்தவுடன்  ஃபோன் எடுத்து ஹலோ சொல்லும் நண்பர் ஃபோனை  எடுக்காமலே இருந்தார் , ரிங் போய்க்  கொண்டே இருந்தது. மீண்டும் மீண்டும் முயற்ச்சித்தேன், எடுத்தவுடன்  "ஹெலோ அண்ணே எப்டி இருக்கீங்க " என்றேன். மறுமுனையிலிருந்து " தம்பி... அது வந்து  அவ இறந்துட்டாளாம்" என்றார். "அப்டியா அண்ணே , எப்போ?" என்று சாதாரணமாக கேட்டேன். "இன்னைக்கு தான் தம்பி, "பாடிய ஆம்புலன்சுல ஊருக்கு கொண்டு வந்துட்டு இருக்காங்களாம்" என்றார்.  "பாடியை" என்ற  வார்த்தையை கேட்ட  பின்பு தான் சுருக்கென்று தலைக்குள் ஏதோ மின்சாரம் பாய்வது போல் உணர்ந்தேன். சில மாதங்களாகவே மருத்துவ மனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவள் இறந்து விட்டாள்.

மூன்றரை வருடமாக காதலித்த என்னவள் உயிரோடு இல்லை என்று உணர்ந்தவுடன்  என் கைகள் மெல்ல நடுங்க தொடங்கியது. கால்கள் மரத்துப் போவதை போல்  உணர்ந்தேன் . காக்காய் வலிப்பு வந்தவன் போல கால்கள் இழுத்துக்கொள்ள தொடங்கியது. இதயம் இரண்டாய் கிழிந்ததைப் போல் உணர்ந்தேன்.

"அண்ணே பேசிக்கிட்டே இருங்க, எனக்கு கை  கால் எல்லாம் நடுங்குது" என்றேன். "ஒண்ணுமில்ல தம்பி, நான் பேசிட்டே  இருக்கிறேன் " என்றார் . ஏதேதோ பேசினோம் , ஒன்றும் தலையில் ஏறவில்லை. "ஊருக்கு வருகிறாயா " என்றார்.  "அவளை நோயாளியாகக் கூட பார்க்க மனமற்ற நான் எப்படி  உயிரற்றவளாக பார்த்து தாங்கி கொள்வேன் ? அவளைக் குறித்த அழகான  நினைவுகளோடு வாழ்ந்து கொள்கிறேனே "  என்று சொல்லி இணைப்பை துண்டித்தேன்.


"ஒருவேளை பொய் சொல்லி இருப்பாரோ" என தோன்றியது . பெரியப்பா வீட்டிற்கு அழைத்தேன், "டேய்  நான்  தான்  தான் பேசுறேன், சொல்றத  அமைதியா கேளு" என்றான் மறு முனையில் என் அண்ணன். அவனால் முடிந்த அளவுக்கு  ஏதேதோ ஆறுதல்  சொன்னான் , அவன் அழுவது எனக்கு நன்றாக புரிந்தது.  "நீ ஏன் அழுகிறாய் , எல்லாம் என் தலை எழுத்து " என்றேன்.
"அவ நம்ம வீட்டுப் பொண்ணுடா" என்றான் , அவளை எங்கள் குடும்பத்தினர் அனைவருக்குமே பிடித்திருந்ததை சொன்னான்  .

இறுதியாக, நான் தற்கொலை செய்ய மாட்டேன் என்று உறுதி மொழி கொடுத்த பின் தான் இணைப்பை துண்டித்தான்.  காபினிலிருந்து  வெளியே வந்தபோது என் கண்ணிலிருந்து கண்ணீர் வருவதை   கவனித்த கடைக்காரர், "க்யா ஹுவா?" என்றார். "குச் நஹி "என்று சொல்லி விட்டு நகர்ந்தேன்  .


நன்றாகத்  தானிருந்தாள், தலை வலி என்று மருத்துவரை பார்க்க போனவளுக்கு தலையில் கட்டி, கான்செர்  என்றார்கள். விதி விளையாடி விட்டிருந்தது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவளை கடைசியாக ஒரு முறை கூட பார்க்க கூட தைரியமில்லாது  மும்பைக்கு ரயில் ஏறியதற்க்காக   என்னை நானே நொந்து கொண்டேன். 


மருத்துவ மனையை விட்டு இறங்கி சாலையில் நடக்க தொடங்கினேன், ஒரு கிலோமீட்டர் சென்றபின்  தூரத்தில் டான்ஸ் பார்'கள் தெரிந்தன, அருகில் சில குடிசை வீடுகளும். குடிசை பகுதியில் எதாவது சிகரெட் கடை இருக்கிறதா என்று பார்த்தேன். சிறிய தேடலுக்குப்  பின் ஒரு பெட்டி கடையை  கண்டுபிடித்தேன்  , ஹிந்தி தெரியாததினால் நானே இரண்டு பாக்கெட் சிகரெட்  மற்றும் தீப்பெட்டியை எடுத்தேன், கடையிலிருந்த சிறுவன் என்ன பேசினான் ஒன்றும் புரியவில்லை ,அவன் தந்த மீதி சில்லறையை வாங்கி கொண்டு மீண்டும்  அறையை நோக்கி நடந்தேன் .  

சொல்லி அழுவதற்கு கூட யாருமில்லாது தவித்தேன், படுக்கையில் விழுந்தேன், என்னையும்  அறியாமல் அழுகை பீறிட்டது. படுக்கையிலிருந்து கீழே விழுந்தேன் உருண்டு புரண்டேன்.

"எனக்கு மட்டும் ஏன் இப்படி கடவுளே, இப்படி எல்லாம் ?" என்று எல்லோரும்  கேட்பது போல் நானும் கேட்டேன் கடவுளிடம்.

"பாவம் ...எத்தனை மாதாங்களாக வலியோடு வாழ்ந்து வந்தாள்?ஹூம்  அவளுக்கு இனி மேல் வலிக்கவே வலிக்காது" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.


சிகரெட்டுகளை புகைத்து தள்ளினேன்... நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது, உறக்கம் வரவில்லை, திடீரென்று இண்டர்காம் ஓசை கேட்டு, போன் எடுத்தேன் "ஆன் கால் பிரதர், ஒரு பேஷண்ட் டினே   போம்பேக்கு கொண்டு போகணும் , வேகம் வா" என்றாள் மலையாளி நர்ஸ் எதிர் முனையில் . சரி என்று சொல்லி விட்டு வாட்ச்சைப் பார்த்தேன்,சரியாக  12 .30 நள்ளிரவு.

நான் மருத்துவமனையை நோக்கி நடக்க தொடங்கி சில நொடிகளில் என் எதிரே  ஆம்புலன்ஸ் வருவதை கண்டு ஆச்சரிய பட்டேன்.

டிரைவர் என்னை நோக்கி  "பேஷன்ட்  வீட்டில் இருக்கிறார், நாம் போய் அவரை எடுத்துக் கொண்டு ஏசியன்  ஹார்ட் சென்டர் , பாந்திராவிருக்கு போக வேண்டும் " என்றார்.சரியென்று தலை அசைத்து  கொண்டே அம்புலன்சில் ஏறினேன் .

                                
ஆம்புலன்ஸ் ரிலையன்ஸ்  நிறுவனத்தின் ஒரு ஊழியரின் வீட்டின் முன் நின்றது. பேஷண்டை ஆம்புலன்சில் படுக்க வைத்து, கார்டியாக் மானிட்டரில் இணைத்தேன், ப்ளட் பிரஷர் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அவருக்கு  நாற்பது வயது தானிருக்கும்.   அவரது மனைவி போகும் வழியெல்லாம் மானிட்டரை பார்த்துக் கொண்டே வந்தார்.

மானிட்டரில் தோன்றும் அலைகளை காட்டி " இப்போது ஏன் மாறுகிறது ஏதாவது பிரச்சினையா" என்று பதட்டமாக ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டே வந்தார். நான் "ஒன்றுமில்லை  ஆம்புலன்ஸ் குலுங்குவதால்  ஏற்படும் மாற்றமே" என்று ஆறுதல் சொல்லி கொண்டே போனேன். பாந்த்ரா ஏசியன் ஹார்ட் சென்டரை அடைந்து, அவசர சிகிச்சை பிரிவில் ஒப்படைத்து விட்டு வெளியே வந்து பெருமூச்சு விட்டேன் " அப்பாடா நோயாளியை உயிரோடு மருத்துவமனையில் ஒப்ப்டைத்தாயிற்று, பிழைத்துக் கொள்வார்" என்று எண்ணி  கொண்டே ரோட்டில் இறங்கினேன்.

மும்பை நகரம் அமெரிக்கா போல் தோற்றமளித்தது. ஆம்புலன்சின் உள்ளேயே பார்த்துக் கொண்டிருந்ததினால் இருந்ததினால் வெளியே இடங்களை பார்க்கவில்லை , நான் எங்கே இருக்கிறேன் என்றே குழப்பமாக இருந்தது. மிக அழகான கட்டிடங்கள், ஆனால் ரசிக்க தான் மனமில்லை.

வாழ்க்கையில் யாரும் பயணம் செய்ய விரும்பாத வாகனம் தானே  ஆம்புலன்ஸ் என்று நினைத்துக் கொண்டே அதில் ஏறி அமர்ந்தேன். ஆம்புலன்ஸ்  பன்வேலை  நோக்கி விரைந்து  கொண்டிருந்தது. எனக்கு ஹிந்தி தெரியாது என்பதாலோ என்னவோ ஆம்புலன்ஸ் டிரைவர் அதிகம் பேசவில்லை, கட்டிடங்கள் வேகமாக நகர்வதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவளைப் பற்றிய நினைவலைகள் நெஞ்சில் நெருப்பாய் வீசியது . என் கரம் கோர்த்து வாழ்க்கையின்  எல்லை வரைக்கும் வருவேன் என சொன்னவள், இன்று ஒன்றுமே சொல்லாமல் போய் விட்டாள்.  நான் அவளோடும், அவள் என்னோடும் பேச வேண்டும் என்று நினைத்திருந்த அனைத்திற்குமே விடை தெரியாமலே போய் விட்டது. நான் வாழ்க்கையில் தோல்வி அடைந்த போது என்னை தேற்றியவள், நான் வெற்றி அடைவதைப் பார்ப்பதை ஏன் தவிர்த்தாள்???

ஃ போன் செய்யும் போது  "இன்று என்ன சாப்பிட்டாய்  "   என்று கேட்பாள்.

"சிக்கன் சாப்பிட்டேன்" என்றால் "நானும் சிக்கன் தான் சாப்பிட்டேன்.... வாட் எ கோ இன்சிடென்ட் இல்ல" என்பாள்.

இப்போது நான் அம்புலன்சில் போய் கொண்டிருக்கிறேன்,  அவளும் தான்  ஆம்புலன்சில் போய் கொண்டிருக்கிறாள், என்னவொரு கோ-இன்சிடென்ட் இல்ல???



வாழ்கையில்...சுவடுகளான காதல்


காதல்....
      என்ற படகில் சயனித்து கொண்டுயிருந்த பொழுது...
பிரிவு.....
      என்ற சவப்பெட்டியில் மூடி வைத்தாய்....


ன்னை வெறுமையாக்கி சென்றாய்.... 
எனினும்,சுவடுகளான சித்திரமாய்   இன்றும்,                                              
என்னுள் உறைந்து இருக்கின்றாய்...                                                             
என் சுவாசக் காற்றே!